வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் வருகிற 7 மற்றும் 8-ந்தேதி நடைபெறும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-01-01 18:45 GMT

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்கும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணக்கையில் இடம் பெற்றுள்ளதை கண்டறிவதற்கும், தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண் பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவுகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பயன்பெறலாம்

இந்த சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6 பி பெற்று ஆதார் எண் அல்லது ஆதார் இல்லை யெனில் படிவத்தில் குறிப்பிட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் புகைப்பட அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் தவறாமல் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் மோகன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்