விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற சிறப்பு முகாம்

விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி பெற சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் 4 நாட்கள் நடக்கிறது.

Update: 2023-09-11 18:40 GMT

ஆலோசனை கூட்டம்

நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த விழாவையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார்.

இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அவர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி அன்று பலர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அதை எளிமைப்படுத்த வேண்டும். மேலும் சிலை ஊர்வல பாதைகளை சீரமைக்க வேண்டும். சிலைகளை கரைக்கும் பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்றனர்.

சிறப்பு முகாம்

பின்னர் உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், சிலைகள் வைக்க அனுமதி பெற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வேலூர் உட் கோட்டத்துக்குட்பட்ட தாலுகா அலுவலகங்களில் நாளை (இன்று) முதல் வருகிற 15-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். அதில் சிலை வைக்க விரும்புபவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்து அனுமதி பெறலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்