எளிதாக கடன் பெற சிறப்பு முகாம்

விருதுநகரில் நடந்த கடன் வசதி பெறும் சிறப்பு முகாமில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

Update: 2023-07-27 18:45 GMT

விருதுநகரில் நடந்த கடன் வசதி பெறும் சிறப்பு முகாமில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

சிறப்பு முகாம்

விருதுநகர் தொழில் வர்த்தக சங்க அரங்கில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு துறைகள் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து கடன் வசதி எளிமையாக்கல் இயக்கம் சிறப்பு முகாம் நடத்தியது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ரூ.114.51 கோடி கடன் உதவிகளுக்கான ஆணைகளை தொழில் முனைவோருக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாக கொண்டு மக்கள் நலத்திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானிய கடன் உதவி திட்டங்களை எளிமைப்படுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடன் வசதி எளிமையாக்கல் இயக்கம் என்ற சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

கடன் வழங்க நடவடிக்கை

அதன்படி இந்த சிறப்பு முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை வங்கியின் மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள், மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்ட இயக்குனர் இயக்ககம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடன் திட்டங்களில் அன்றைய தினமே கடன் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள 480 வங்கி கிளைகள் மூலம் 2023-2024-ம் ஆண்டு முதல் காலாண்டில் 3,242 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.396.24 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.மேலும் 2-ம் காலாண்டில் முதல் மாதத்தில் 915 தொழில் முனைவோர்களுக்கு மொத்தம் ரூ.114.51 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகையா, கனரா வங்கி உதவி பொது மேலாளர் சுரேந்திர பாபு, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் தாமோதரன், ஸ்டேட் பேங்க் மண்டல மேலாளர் செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்