மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்

மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பங்கள் பதிய நடைபெற்ற சிறப்பு முகாம்களை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-29 19:30 GMT

காரியாபட்டி, 

மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பங்கள் பதிய நடைபெற்ற சிறப்பு முகாம்களை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

காரியாபட்டி மற்றும் திருச்சுழி தாலுகா பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கல்குறிச்சி கிராமத்தில் நடைபெற்று வந்த முகாமை அமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது சிறப்பு முகாம்களில் உள்ள தன்னார்வலர்களிடம் பயோமெட்ரிக் மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய சர்வர் சரியாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். விண்ணப்பங்களை முறையாக விண்ணப்பிக்கும் படி அவர் அறிவுறுத்தினார். அப்போது சர்வர் பிரச்சினை இருப்பதாக ஊழியர்கள் அமைச்சரிடம் கூறினர்.

அதிகாரிகளை கண்டித்தார்

அதேபோல திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் நடைபெற்ற முகாமினையும் அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரே டேபிளில் 3 தன்னார்வலர்கள் ஒரே இடத்தில் விண்ணப்பித்து வந்தனர். உடனே அதிகாரிகளை அழைத்து அரசு வழிமுறைகள் படி பொது மக்களுக்கு சரியான ஏற்பாடு செய்யவில்லை ஏன் என அதிகாரிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டித்தார்.

ஆய்வின் போது கலெக்டர் ஜெயசீலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லம், கண்ணன், பொண்ணுத்தம்பி, சந்தனபாண்டி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, காரியாபட்டி யூனியன் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் குருசாமி, கந்தசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

ரோசல்பட்டி

விருதுநகர் தாலுகாவில் ரோசல்பட்டி, சத்திர ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெறும் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பதிவு அலுவலர்களிடம் விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஜெயசீலன், சீனிவாசன் எம்.எல்.ஏ., சாத்தூர் ஆர்.டி.ஓ. சிவக்குமார், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகராட்சி தலைவர் மாதவன், தாசில்தார், அரசு ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்