வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக 651 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக 651 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 707 ஆண்கள், 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 153 பேர் என்று 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பம் அளிக்க 651 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாம்களில் பெயர் சேர்க்க 3,514 பேரும், நீக்கம் செய்ய 195 பேரும், திருத்தம் மேற்கொள்ள 661 பேரும் என்று மொத்தம் 4,370 பேர் விண்ணப்பங்கள் அளித்தனர்.
2-வது நாளாக சிறப்பு முகாம்
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 651 இடங்களில் நடந்த முகாமிற்கு பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று விண்ணப்பங்கள் அளித்தனர். அதனை அரசு அலுவலர்கள் சரி பார்த்து பெற்று கொண்டனர். காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையருமான அனில்மேஷ்ராம், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவிகலெக்டர் பூங்கொடி, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.