முகரம் பண்டிகையையொட்டிவிழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள்இன்று முதல் இயக்கப்படுகிறது
முகரம் பண்டிகையையொட்டி விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
முகரம் பண்டிகை மற்றும் வார இறுதியை முன்னிட்டு இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) ஆகிய நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சீபுரம், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கண்ட விடுமுறையை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் கூடுதலாக 150 சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை தேவைக்கு ஏற்ப போதுமான பஸ்களை இயக்க ஏற்பாடு செய்திடவும், பஸ்களின் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.