கொடைக்கானலில் 12 இடங்களை சுற்றிப்பார்க்க சிறப்பு ஏற்பாடு

நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலில் உள்ள 12 இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (நாகர்கோவில்) ஜெரோலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-21 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலில் உள்ள 12 இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (நாகர்கோவில்) ஜெரோலின் தெரிவித்துள்ளார்.

அரசு பஸ்சில் சுற்றுலா

தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு சென்று இதமான சூழலை அனுபவிக்க திட்டமிடுவார்கள்.

இதில் ஏழை, எளிய மக்களுக்கு சரியான வழிகாட்டுதலும், வாடகை கார், வேன் போன்றவை அமர்த்தி சென்றால் அதிக பணம் செலவாகும் என்பதாலும் அவர்கள் பயணத்தை தவிர்த்து விடுகிறார்கள்.

இதனை நிவர்த்தி செய்யும் வகையிலும் கோடை விடுமுறையை குளு குளுவென ஏழை, எளிய மக்களும் குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

12 சுற்றுலா தலங்கள்

பின்னர் கொடைக்கானல் சென்றதும் அங்கிருந்து இணைப்பு பஸ்கள் மூலம் கொடைக்கானலில் உள்ள 12 இடங்களுக்கு பொதுமக்கள் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த இணைப்பு பஸ்கள் கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து அப்பர் லேக், மெயர் பாயிண்டு, பாம்பார் ஆறு, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், ஏரி, மியூசியம் என 12 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலுக்கு ரூ.320 கட்டணம் வசூலிக்கப்படும். கொடைக்கானலில் இருந்து 12 இடங்களுக்கு அழைத்துச் செல்ல பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ.75 கட்டணமும் வசூலிக்கப்படும்.

குழுவாகவும் செல்லலாம்

கொடைக்கானலில் இணைப்பு பஸ் மூலமாக மற்ற இடங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சுற்றுலா சேவை ஏப்ரல் மற்றும் மே மாதம் மட்டுமே இருக்கும். மேலும் நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலுக்கு 50 பேர் கொண்ட குழுவினர் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும்.

இதற்காக 50 சுற்றுலா பயணிகளின் டிக்கெட் கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும் விவரங்களுக்கு 9487599082 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (நாகர்கோவில்) ஜெரோலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்