தென்மேற்கு பருவமழை தொடங்கியது -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2023-06-08 23:19 GMT

சென்னை,

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். கேரளாவில் அந்த காலகட்டத்தில் பரவலாக மழை பெய்வதோடு, மேற்கு திசையில் இருந்து காற்றும் அதிகமாக இருக்கும். இதனை கணக்கிட்டே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

இந்தநிலையில் அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'பிப்பர்ஜாய்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இது மிகத் தீவிர புயலாக வலுவடைந்து நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.

இந்த புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஆனது.

கேரளாவில் தொடங்கியது

இந்த புயல் இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த 3 நாட்களுக்கு நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக கேரளப் பகுதிகளிலும், அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் கேரளாவில் பரவலாக மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாலும், மேற்கு திசை காற்று அங்கு வீச தொடங்கி இருப்பதாலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

மேலும் இது தென் தமிழக பகுதிகளில் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு வாரம் காலதாமதமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 4 நாட்கள் மழை

இந்த புயல் காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் இன்று முதல் 12-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும், இயல்பான அளவைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், இன்று மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், ராசிபுரம், தொழுதூர், மலையூர், குடிமியான்மலை, லப்பைக்குடிக்காடு, குருங்குளம் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்