ஐவர் பூப்பந்து போட்டியில் சதர்ன் ரெயில்வே அணி முதல் இடம் பிடித்தது

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஐவர் பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சதர்ன் ரெயில்வே அணி முதல் இடம் பிடித்தது, பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி அணி வெற்றிபெற்றது.;

Update: 2023-05-15 19:27 GMT

பூப்பந்து போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் அகில இந்திய பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பூம்பந்தாட்ட கழகம் மற்றும் ஜோலார்பேட்டை பூப்பந்தாட்ட கழகம் இணைந்து தேசிய அளவிலான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியை மாநில பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் ம.அன்பழகன் தலைமையில், கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இதில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட கழக துணைத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜே.பி.பி.சி. தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார்.

சதர்ன் ரெயில்வே

ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த சதர்ன் ரெயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த ஐ.சி.எப். அணிக்கு ரூ.40 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். அணிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கினார்.

அதேபோன்று பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி அணிக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த சென்னை எல்.எஸ். எஸ். அணிக்கு ரூ.20 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த சேலம் தேவாரம் பைவ் ஸ்டார் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

விழாவில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் சா.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்