தென்மண்டல கவுன்சில் கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-ந் தேதி கேரளா பயணம்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2-ந் தேதி கேரளாவுக்கு செல்கிறார்.;
சென்னை,
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் தென்மண்டல கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன. இந்த தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 3-ந் தேதி நடைபெறவுள்ளது.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
எல்லை பிரச்சினைகள்
இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பகிர்வு பிரச்சினைகள், அணைகள் குறித்த விவகாரங்கள், எல்லை பகுதிகளில் உள்ள பாதுகாப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் முன்னிலைப்படுத்தப்படும்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2-ந் தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்று கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
2-ந் தேதி இரவு திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் 3-ந் தேதி நடக்கும் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு 7 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
கோவை பயணம்
முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 1-ந் தேதியன்று கோவைக்கு சென்று அங்கு நடைபெறும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத்திருமண விழாவில் பங்கேற்கிறார்.