தென்னிந்தியா என்றாலே சென்னை என கருதுமளவிற்கு புகழ்பெற்ற நகரமாக விளங்குகின்றது - ஓ.பன்னீர்செல்வம் சென்னை தின வாழ்த்து
தென்னிந்தியா என்றாலே சென்னை என கருதுமளவிற்கு புகழ்பெற்ற நகரமாக சென்னை விளங்குகின்றது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி, இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு தமிழ் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. வண்ண விளக்குகள், கேளிக்கை, விளையாட்டுகள் என அந்த பகுதியே திருவிழாக் கோலம் பூண்டது. கனமழை பெய்த போதிலும் சென்னை தினம் உற்சாகமாக ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் 383வது சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சிகிச்சை, தொழில்தொடங்குதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருவோரை வாழ வைக்கும் இடமாகவும், தகவல் தொழில்நுட்பம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மையமாகவும், தென்னிந்தியா என்றாலே சென்னை என கருதுமளவிற்கு புகழ்பெற்ற நகரமாகவும் விளங்குகின்ற "நம்ம சென்னை" இன்று தனது 383வது பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அனைவருக்கும் எனது #சென்னைதினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.