தஞ்சை மாநகராட்சி பகுதியில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு;

Update: 2022-07-27 20:08 GMT

தஞ்சை மாநராட்சி பகுதியில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிதாக தேர்ந்ெதடுக்கப்பட்ட 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இப்ராகிம் சுல்தானுக்கு மேயர், துணைேமயர், ஆணையர் வரவேற்பு அளித்தனர்.

1 மணி நேரம் மட்டுமே குடிநீர்

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

புண்ணியமூர்த்தி(தி.மு.க.):- கீழவாசல் பகுதியில் தினந்தோறும் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. நல்ல குடிநீர் வழங்க வேண்டும்.

மேத்தா(தி.மு.க.):- தஞ்சையில் உள்ள 4 வீதிகளில், சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. அங்கு பணிகள் மெத்தனமாக நடக்கிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன்(அ.தி.மு.க.):- தஞ்சை மாநகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தூய்மை பணியாளர்கள், மக்கும், மக்காத குப்பை தரம்பிரிப்பதால், வார்டுகளில் தூய்மை பணி நடைபெறவில்லை. அதனால் குப்பைகளை தரம் பிரிப்பதுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ரூ.148 கோடிக்கு திட்ட மதிப்பீடு

மேயர் சண்.ராமநாதன்:- தஞ்சை மாநகராட்சி பகுதியில் 15 நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை வராதளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் 4 வீதிகளில் 2 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பிரச்சினை குறையும்.

தற்போது 14-வது வார்டு முதல் 28-வது வார்டு வரை ரூ.148 கோடியே 85 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அரசு ஒப்பதல் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டிகளும், தள்ளுவண்டிகளும் விரைவில் வழங்கவுள்ளோம்.

கோஷங்கள் எழுப்பினர்

மணிகண்டன்:- நான் குறைகளை சுட்டிக்காட்டி பேசுகிறேன். மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தரவேண்டும்.

அப்போது மேயர்.சண்ராமநாதன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என கூறிவிட்டு திடீரென எழுந்து சென்றார்.

இதையடுத்து அ.தி.மு.க உறுப்பினர்கள் மணிகண்டன், கோபால் உள்ளிட்டோர் மக்கள் குறைகளை கூறும் எதிர்கட்சியினருக்கு பதில் கூறாமல் எழுந்து சென்ற மேயரை கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் இதர கட்சி கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் உள்ள குறைகளை தெரிவிக்க முடியவில்லையே என தெரிவித்தனர்.

முற்றுகையிடுவோம்

பின்னர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குரல் கொடுக்கும்போது, மேயர், எங்களுக்கு உரிய பதில் கூறாமல் அடுத்த உறுப்பினரை பேச அழைக்கின்றார். எங்களுக்கு போதிய நேரம் ஒதுக்காமல், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என கூட்டத்தை முடித்து விட்டு பாதியிலேயே எழுந்து சென்று விட்டார். இனி வரும் கூட்டத்தில் இது போன்று நடந்து கொண்டால் மாமன்ற கூட்டரங்கை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்