குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

குருமூர்த்திநாயக்கன்பட்டியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

Update: 2023-10-02 22:21 GMT


காந்தி ஜெயந்தியையொட்டி விருதுநகர் யூனியன் குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் கிராம சபை கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் வரதராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறியதுடன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் புகார் கூறினர். மாணிக்கம் தாகூர் எம்.பி. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் 10 தினங்களுக்குள் தாமிரபரணி குடிநீர் குடிக்க கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர். மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் உள்ள குறைபாடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி. உறுதி அளித்தார். கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட எம்.பி. இதுகுறித்து பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். இந்தநிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வைரவ சாமி, வக்கீல் சரவணன், செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்