திருப்பூர்,
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடன் சூரியசக்தியால் இயங்கும் சூரிய மின்வேலியை ரூ.3 கோடி மானியத்துடன் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2022-23-ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. சூரியஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக்காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின்வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் அசவுகரியம் ஏற்பட்டு விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் பரப்பு அல்லது 566 மீட்டர் சூரிய மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரியமின் வேலி அமைப்பதற்கான செலவு தொகையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். 5 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 296, 7 வரிசைகள் கொண்ட சூரிய மின்வேலி அமைக்க ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 263, 10 வரிசைகள் கொண்ட சூரியமின்வேலி அமைக்க ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 879 வீதம் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ளலாம்.