தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு
கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மருதாடு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;
நெல்லிக்குப்பம்,
சாத்தூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் கடலூர் தாழங்குடா கடலில் கலந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 16 ஆயிரத்து 368 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சீறி பாய்ந்து சென்றது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் அடுத்த மருதாடு தரைப்பாலமும் மூழ்கியது. இதனால் சோரியாங்குப்பம், அழகியநத்தம், இரண்டாயிரவளாகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலத்தின் இருபுறமும் போலீசார் பேரிகார்டு அமைத்து பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
கரையில் மண் அரிப்பு
மேல்பட்டாம்பாக்கம் கஷ்டம்ஸ் சாலையோரத்தில் உள்ள தென்பெண்ணையாற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரை உடைந்து அப்பகுதிக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே மண் அரிப்பை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் தடுப்பணை தற்போது நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், கவுன்சிலர் பன்னீர்செல்வம் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் மழையால் பாதிப்பு உள்ளதா? என்று அவர்கள் பார்வையிட்டனர்.