பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை
சிவகங்கை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. அவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் இதுவரை 11,589 விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. அவர்கள் வருகிற 30-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11,589 விவசாயிகள்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 59,075 விவசாயிகள் தகுதியானவர்கள் என வரப்பெற்றுள்ளது.
இதில் 47,486 விவசாயிகளுக்கு 14-வது தவணை விடுவிக்க தயார் நிலையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் மேலும் இன்னும் 11,589 விவசாயிகள் தங்கள் இருப்பை உறுதிசெய்யாமல் உள்ளார்கள்.
ஆன்லைனில் பதிவு
இதுவரை விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்வது பி.எம்.கிசான் திட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மின்னணுமுறையில் விவசாயியின் இருப்பை உறுதிசெய்வதற்காக (இ-கே.ஒய்.சி) என்ற முறையில் ஆன்லைனில் விவசாயிகள் விவரங்களை கீழ்க்காணும் 3 வழிகளில் பதிவுசெய்யலாம்.
தங்களது ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைத்து உள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட இணையதளமான www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார்எண் விவரங்களை பதிவு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்த்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களதுவிரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இ-கே.ஒய்.சி. பதிவுசெய்திடாத 11,589 விவசாயிகளின் விவரம் அந்தந்த வட்டாரவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் உள்ளது.
30-ந்தேதிக்குள்...
ஆதலால் தங்கள் இருப்புவிவரங்களை திட்ட வலைத்தளத்தில் பதிவு செய்திட அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி வரும் ஜூன் 30-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.