உள்ளாடைக்குள் மறைத்து வைத்து 4 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது
மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து, எடுத்து வந்த இரண்டு தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த குஜராத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த குஜராத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதிகளை தனி அறைகளுக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர்கள் நான்கு பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.