கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல்?
ஒடிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றி வந்த லாரியில் கஞ்சா கடத்தி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை பிடித்து, டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
போலீஸ் சூப்பிரண்டு வாகன தணிக்கை
வடமாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு சர்்வீஸ் சாலையில் திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி, வேன், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, அவற்றில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவினர் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு கன்டெய்னர் லாரியில் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்தபோது மூட்டைகளில் பஞ்சு இருப்பதாக தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்வதற்காக ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
கஞ்சா கடத்தல்?
அங்கு வைத்து வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் 2 மூட்டைகளை சோதனை செய்தனர். அந்த மூட்டைகளில் பஞ்சு இருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து பஞ்சு மூட்டைகளை சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் சில கேள்விகளுக்கு டிரைவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். அதனால் லாரியில் இருக்கும் அனைத்து பஞ்சு மூட்டைகளையும் லாரி உரிமையாளர் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை சோதனை செய்ய உள்ளதாகவும், இதுகுறித்து லாரியின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதுவும் சிக்கவில்லை
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வேலூர் நகருக்குள் வந்த கன்டெய்னர் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களை சோதனையிடும்படி வேலூர் வடக்கு, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ரஜினிகாந்த், சியாமளா ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு வேலூர் பழைய பஸ்நிலையம், லாங்கு பஜார், கோட்டை சுற்றுச்சாலை இ.பி. அலுவலகம் அருகே வாகனத் தணிக்கை மற்றும் அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் கூறினர். போலீசாரின் திடீர் வாகன தணிக்கையால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.