சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை
நெல்லையில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
நெல்லையில் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயம் உற்பத்தி
நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம் (பல்லாரி), சின்ன வெங்காயம் (உள்ளி) விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிக குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ.100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ.30 முதல் ரூ.40-ஆக இருந்து வந்தது.
ரூ.100-க்கு விற்பனை
இந்த நிலையில் நெல்லை, பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.40-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் நேற்று முன்தினம் ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டு உள்ளது. பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தாராபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட்டிற்கு தினமும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும். ஆனால் நேற்று 20 மூட்டை தான் வந்துள்ளது. எனவே வரத்து குறைவால் விலை உயர்ந்து உள்ளது. அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 உயர்ந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.