சின்ன வெங்காய கிட்டங்கியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

சின்ன வெங்காய கிட்டங்கியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-02-28 19:04 GMT

ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் ராஜாசிதம்பரம், செல்லதுரை, ஆர்மரி வரதராஜன் விசுவநாதன், நீலகண்டன், இரூர் ராமராஜ், ஏ.கே.ராஜேந்திரன், முருகேசன், ரமேஷ் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகள், குளங்களை பருவமழைக்கு முன்பாக தூர்வார வேண்டும். மருதையாற்று அணை அருகே கொட்டரை, ஆதனூர் விவசாயிகள் ஆற்றின் மறுகரையில் உள்ள தங்களது விளை நிலங்களுக்கு சென்று வர மெட்டல் சாலை அமைத்து தர வேண்டும். பச்சைமலையில் சின்னமுட்டுலு அருகே நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானியத்தில் தீவனம்

காலாவதியான குவாரிகளை இழுத்து மூடி கனிம வளங்களை காப்பாற்ற வேண்டும். வேளாண்மை விஞ்ஞானிகள் சுவாமிநாதன், ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பயனாளிகளை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிகுளத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்துதல், பாதுகாத்து வைத்தல் மற்றும் ஏலக்கிட்டங்கியை மீண்டும் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

வேளாண் பொறியியல் துறை மூலம் டிராக்டர்களை மானியத்தில் அதிக அளவில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வி.களத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனம் மானியத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் மற்றும் எடை மோசடியை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.

மனுக்கள் மீது நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு அளிக்கும் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். மேலும் விவசாயிகள்-பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குனர் சங்கர்.எஸ்.நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்