சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் சூரிய வெளிச்சத்துக்காக 'ஸ்கை லைட் சிஸ்டம்' அமைப்பு
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்படும் புதிய முனையத்தில் சூரிய வெளிச்சத்துக்காக நவீன தொழில் நுட்பத்தில் ‘ஸ்கை லைட் சிஸ்டம்’ அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களை இணைத்து ஒருங்கிணைந்த அதிநவீன புதிய விமான முனையம் ரூ.2,400 கோடி செலவில் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
சுமார் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்படும் புதிய முனையங்கள் பணி 2021-ம் ஆண்டில் முடிந்து பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு, நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் ஓர் ஆண்டில் கையாளப்படும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 1.7 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 3.5 கோடியாக அதிகரிக்கும். அதற்கு தகுந்தாற்போல் புதிய முனையங்களில் கூடுதல் அதிநவீன இயற்கை சூழல் கொண்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது.
தரை தளத்தில் பன்னாட்டு வருகை பயணிகளுக்கான வழக்கான நடைமுறைகளும், 2-வது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. புதிய அதிநவீன முனையத்தில் 5 தளங்கள் உள்ளன. பயணிகள் ஓய்வு அறைகள், வி.வி.ஐ.பி.க்கள் தங்கும் அறைகள், ஷாப்பிங் மால்கள் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகள் உள்ளன.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல் முதலாக, சூரிய வெளிச்சம் நேரடியாக விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வரும் வகையில் நவீன தொழில் நுட்பத்தில் 'ஸ்கை லைட் சிஸ்டம்' அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 6 மீட்டர் வட்ட வடிவில் 10-க்கும் மேற்பட்ட 'ஸ்கை லைட் சிஸ்டம்' அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இவை சூரிய வெளிச்சத்தை மட்டுமே உள்ளே அனுப்பும். வெப்பத்துடன் கூடிய புற ஊதாக்கதிர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் திறனும் இதில் உள்ளது. இதற்காக சிஸ்டத்துக்கு மேலும், கீழுமாக 2 பகுதிகளிலும் சிறப்பு கண்ணாடிகள் அமைக்கப்படுகின்றன. அவைகள் சூரிய ஒளியை பில்டா் செய்து வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, வெப்பத்தை தடுத்து நிறுத்தும். மேலும் சூரியனின் திசைக்கு ஏற்ப சாயும் வகையில் பிரத்யேகமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. 'ஸ்கை லைட் சிஸ்டம்' அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதனால் புதிய அதிநவீன விமான முனையங்கள் நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்ட வசதியாகவும் இருக்கும். அதே நேரத்தில் மின்சார செலவும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையங்களின் பணிகள் சுமாா் 80 சதவீதம் முடிக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.