விண்ணை தொடும் பூக்கள் விலை:இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து

பூக்கள் விலை விண்ணை தொட்டதால் இதுகுறித்து இல்லத்தரசிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.;

Update: 2022-12-30 18:45 GMT

 விழாக் காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவ மழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகிறது.

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன.

தேனி மார்க்கெட்

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, ஜாதிப் பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டு பூ உள்பட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பூக்கள் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, சீலையம்பட்டி, கம்பம் ஆகிய இடங்களில் பூ மார்க்கெட் உள்ளது.

இதில் தேனியில் உள்ள பூ மார்க்கெட் கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கி சுமார் 50 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 15 கடைகள் உள்ளன. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மல்லிகைப்பூவின் வரத்து குறைவாக இருக்கும். ஆனால் ஜாதிப்பூ அதிக அளவில் வரத்தாகும். மேலும் தற்ேபாது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் செடிகளில் மொட்டுகளாக இருக்கும்போதே பூக்கள் கருகிவிடுகின்றன.

இதனால் மல்லிகைப்பூவின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பனிப்பொழிவு அதிகம்

செல்வி, (பூ வியாபாரி, தேனி):- தேனி மாவட்டத்தில் என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே பூ வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் நானும் அதையே செய்து வருகிறேன். விழா காலங்களில் மட்டுமே பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். இங்கு கொரோனா காலத்திற்கு பின்பு பூக்களின் விற்பனை மிகவும் குறைந்து விட்டது. தற்போது பனிக்காலமாக இருப்பதால் செடிகளில் பூக்கள் மொட்டாக இருக்கும்போதே கருகி விடுகின்றன. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்து இருந்தாலும் சபரிமலை சீசன் விழா காலம் என்பதால் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

மகாலட்சுமி (பூ வியாபாரி, தேனி அல்லிநகரம்):- கடந்த 30 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்து வருகிறேன். பூ மார்க்கெட்டில் சுமார் 15 கடைகள் உள்ளன ஒவ்வொரு கடையிலும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை வியாபாரம் ஆகும். பெண்கள் அதிகம் விரும்பும் ஜாதி மல்லி, முல்லை பூக்கள் சீசன் தற்போது இல்லை என்பதால் பல்வேறு பகுதிகளில் இந்த பூக்கள் முழம் ரூ.100 வரை விற்கப்படுகிறது.

உதிரிப்பூக்கள்

தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இங்கு வரத்தாகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் பூக்கள் வரத்து சற்று குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்தது. சபரிமலை சீசன் என்றால் கேரளாவிற்கு பூக்கள் அதிகமாக விற்பனையாவது வழக்கம். ஆனால் முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு பிறகு கேரளாவிற்கு பூக்களை வாங்கி செல்வது குறைந்து விட்டது.

ஆர்த்தி (இல்லத்தரசி, எரணம்பட்டி):- பெண்கள் அதிகம் விரும்பும் பூக்களான ஜாதி மல்லி, முல்லை பூக்கள் சீசன் இல்லை என்பதால் பல்வேறு பகுதிகளில் பூக்கள் முழம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு பெண்களும் பூக்களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே மார்க்கெட்டுகளுக்கு சென்று உதிரிப்பூக்களாக வாங்கி கட்டி வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் செடிகள் வாங்கி வைத்து வளர்த்து வருகிறோம்.

விலை அதிகரிப்பு

பிரியதர்ஷினி (தனியார் நிறுவன ஊழியர், அல்லிநகரம்):- பெண்கள் அனைவரும் மல்லிகை பூவையே அதிகம் விரும்பி வாங்குவார்கள். பூக்களின் விலை அதிகரித்து காணப்படுவதால் கட்டிய பூவை வாங்குவதை விட உதிரிப்பூக்களை அதிகமாக வாங்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு சாமந்திப்பூ, ரோஜா பூக்களைத்தான் வாங்க வருகின்றனர். இந்த பூக்களின் விலை சற்று குறைவாக இருப்பதாலும் கட்டாமல் வைத்துக் கொள்வதாலும் அதனை அதிகமாக வாங்கி செல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்