அரசு துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-27 18:45 GMT

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நான் முதல்வன் திட்டம்

தமிழக இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன்களை உருவாக்குவதற்கு அரசு உதவுகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாக கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழக அரசால் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு தேர்வு, ரெயில்வே, வங்கி தேர்வுகளுக்கு கட்டணமில்லா 100 நாட்கள் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியினை மேற்கொள்ள ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அவசியம். போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது, நேர்முக தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த முகாமில் பயிற்றுவிக்கப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து 260-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 150 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆறு மாதமாக மத்திய அரசு பணியாளர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே, அதிகளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து இ்ந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்