வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-06-30 09:37 GMT

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்கு 80 ஜி-க்கான ரசீது மற்றும் பூங்காவை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 3 வயதுடைய 'ஷேரு' என்ற ஆண் சிங்கத்தை 6 மாத காலத்துக்கு தத்தெடுத்து அதற்குண்டான காசோலையை வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் வழங்கினார். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் 2018-2020-ம் ஆண்டு 'அனு'என்ற வெள்ளைப்புலியையும், 2021-ம் ஆண்டு 'விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், 'பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாத காலத்துக்கு தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்