சாக்கடை கால்வாயில் அமர்ந்து காங்கிரசார் திடீர் போராட்டம்

நெல்லையில் காங்கிரசார் கால்வாயில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-23 19:17 GMT

நெல்லையில் காங்கிரசார் கால்வாயில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமிரபரணியில் கழிவுநீர்

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை செழிப்படைய செய்து வங்கக்கடலில் கலக்கிறது. நகர் பகுதிகளில் இந்த ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால் மாசுபட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதில் பெருமளவு கழிவுநீர் கலக்கிறது. குறிப்பாக நெல்லை மாநகராட்சி பகுதியில் அதிகளவு கழிவுநீர் கலப்பதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறி குளிப்பதற்கும், குடிப்பதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் மணிமூர்த்தீசுவரம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுபோல் ஓடி வந்து தாமிரபரணியில் கலக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் போராட்டம்

இந்த நிலையில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மணிமூர்த்தீசுவரம் தாமிரபரணி ஆற்றுக்கு திரண்டு சென்றனர். அங்கு ஆற்றில் கழிவுநீர் கலக்கும் முகத்துவாரம் பகுதிக்கு சென்றனர். கழிவுநீர் கால்வாயின் நடுவே உள்ள பாறையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராமேஸ்வரன் தலைமையில் போலீசாரும், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், நெல்லை தாசில்தார் வைகுண்டம் ஆகியோரும் அங்கு வந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சாக்கடை கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில், 'தமிழகத்தில் உருவாகி 4 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி மாசுபடுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்' என்றார்.

இந்த போராட்டத்தில் தச்சநல்லூர் மண்டல தலைவர் கெங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், பரணி இசக்கி, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பி.வி.டி.ராஜேந்திரன், மானூர் வட்டார தலைவர் பாக்கியகுமார், மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜோதிபுரம் தங்கராஜ், அனந்த பத்மநாபன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஆண்டனி ராஜா, தச்சை வாழப்பாடி முருகன், சங்கர்செல்வம், பிரபுசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்