நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால் சோகம்: மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலட்சுமி (18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஓராண்டாக அவர் நெல்லையில் உள்ள தனியார் பயிற்சி மைய விடுதியில் தங்கியிருந்து 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். விடுதியில் தங்கி இருந்ததால் செலவு அதிகமானதாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன், முத்துலட்சுமியிடம் வீட்டில் இருந்து பயிற்சிக்கு செல்லுமாறு கூறினார். அதன்படி அவரும் வீட்டில் இருந்தபடி தினமும் அதிகாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பயிற்சிக்கு சென்று வந்தார். ஆனாலும் பயிற்சிக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் மீண்டும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று முத்துலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு மணிகண்டன் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த முத்துலட்சுமி நேற்று காலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.