கரியமாணிக்கம் கிராமத்தில் சீதை- ராமர் திருக்கல்யாணம்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கரியமாணிக்கம் கிராமத்தில் சீதை- ராமர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஏலத்தில் 9 தேங்காய்கள் ரூ.1 லட்சத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.

Update: 2023-10-07 19:50 GMT

சீதை- ராமர் திருக்கல்யாணம்

இலங்கையில் நடைபெற்ற போரில் ராமர், ராவணனை வென்று சீதையை அங்கிருந்து அழைத்துக்கொண்டு அயோத்திக்கு சென்ற போது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 94 கரியமாணிக்கம் கிராமத்தில் இளைப்பாறுவதற்காக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை அன்று சீதை- ராமர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 11 மணியளவில் சங்கல்பம், புண்யாஹவாசனம், அனுக்ஞை, கும்ப ஆராதனம், ஹோமங்கள் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.

தேங்காய்கள் ஏலம்

அதைத்தொடர்ந்து சீதை- ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாற்றுதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிகழ்ச்சியில், சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அதை சாப்பிட்டால் திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை.

இதையொட்டி சுவாமிக்கு படைக்கப்பட்ட 9 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.23 ஆயிரத்திற்கும், குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. 9 தேங்காய்களும் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது. தேங்காய்களை பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சிறுகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு ராமபிரான் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கருட வாகனம்

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இதேபோல், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டி ஆதிநாயகபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அழகியமணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரசன்ன வெங்கடாஜலபதி

துறையூர் அடுத்துள்ள பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் செங்கோலுடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், துறையூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பிரசன்ன வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்