தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் கேட்டு உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக இன்று தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

Update: 2023-05-23 17:52 GMT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக இன்று தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது.

இதற்காக மாணவர்கள் தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினர். ஆனால் ஆன்லைன் பிரச்சினை காரணமாக பல மாணவர்களால் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. தேர்வு கட்டணத்தை செலுத்த கடந்த 13-ந் தேதி இறுதி நாளாகும். ஆனால் மாணவர்கள் கால அவகாசம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே மாணவர்களுக்கு இரண்டு முறை அவகாசம் கொடுத்திருந்தது. ஆனாலும் இணையதள சேவை தடைப்பட்டதால் மாணவர்கள் தேர்வு கட்டணத்தை கட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.

தேர்வு தள்ளிவைப்பு

எனவே தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் கேட்டு நேற்று முன்தினம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேற்றும், இன்றும் (23, 24-ந் தேதி) ஆகிய இரண்டு நாள் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில் மாணவர்களின் வருகை பதிவேடு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் மாணவர்கள் நேற்றும் இன்றும் பணம் செலுத்தலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்