சீர்காழி நகரசபை கூட்டம்
சீர்காழி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது.;
சீர்காழி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு ஆணையர் வாசுதேவன், துணைத்தலைவர் சுப்பராயன், என்ஜினீயர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். மன்ற தீர்மானங்களை வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
சாமிநாதன்(தி.மு.க):- பழைய பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.
கலங்கலாக வரும் குடிநீர்
ராஜசேகரன் (தே.மு.தி.க.):- எனது வார்டுக்குட்பட்ட தெருக்களில் குப்பைகளை அள்ள ஆட்கள் வருவதில்லை. நகராட்சியால் வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது.
வேல்முருகன் (பா.ம.க):- பருவமழை தொடங்க உள்ளதால் விடுபட்ட நீர்நிலைகள் மற்றும் வடிகால்களை தூர்வார வேண்டும். எனது வார்டு பகுதியில் கூடுதலாக தெருவிளக்கு அமைத்து தர வேண்டும்.
நாகரத்தினம் (அ.தி.மு.க.):-எனது வார்டில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் வசதி
ஜெயந்தி (சுயேச்சை):- குமரகோவில் தெருவில் புதிதாக சாலை அமைத்து தர வேண்டும்.
முபாரக்அலி (தி.மு.க.):- எனது வார்டு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி செய்து தர வேண்டும்.
தேவதாஸ் (தி.மு.க.) :-சீர்காழி நகராட்சியில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற நீண்ட நாட்கள் ஆகிறது. உடனுக்குடன் சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொசுத்தொல்லை
ராஜேஷ் (சுயேச்சை):-சீர்காழி நகர் பகுதியில் வயதானவர்கள் இறந்து போனால் டாக்டரிடம் சான்றிதழ் பெறுவது சிரமமாக உள்ளது. சீர்காழி நகராட்சிக்கு என டாக்டர் நியமனம் செய்ய வேண்டும்.
முழுமதி (ம.தி.மு.க):-எனது பகுதிகளில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
துணைத் தலைவர்:-நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையர்கள் சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நடவடிக்கை
தலைவர்:-சீர்காழி தென்பாதி பயணிகள் மாளிகை அருகில் ரூ.7½ லட்சம் மதிப்பீட்டில் மாடுகளை அடைக்கும் பட்டி அமைக்கப்பட உள்ளது. ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை சீரமைக்கப்படும். நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும். மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்காழி நகர் பகுதிக்கு 79 தெருவிளக்கு புதிதாக அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.