கீரனூர் போலீஸ் நிலையம் முற்றுகை
இருதரப்பினர் மோதலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கீரனூரை அடுத்துள்ள எட்டுக்கால் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவருடைய மனைவி சாரள் மேரி என்பவருக்கும், ஜோசப் பாண்டியன் மகன் அன்பரசன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த 28-ந் தேதி தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தசம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அன்பரசனின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மற்றொரு தரப்பினரையும் கைது செய்ய வேண்டுமென கூறினர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் மீராபாய் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.