வாரிய தலைவர்கள் பதவிக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் சிபாரிசு

வாரிய தலைவர்கள் பதவிக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை கட்சி மேலிடத்திடன் முதல்-மந்திரி சித்தராமையா சிபாரிசு செய்துள்ளார்.

Update: 2023-10-10 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 4 மாதங்கள் ஆகிறது. மந்திரி பதவி கிடைக்காத பல்வேறு எம்.எல்.ஏ.க்கள், வாரியங்களுக்கான தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அரசு அமைந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் வாரியங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். அதே நேரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களில் 50 சதவீதம் பேருக்கும், மீதி 50 சதவீதம் தான் எம்.எல்.ஏ.க்களுக்கும், வாரிய தலைவர் பதவிக்காக ஒதுக்கப்பட்டு இருப்பதாக மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே. சிவக்குமார் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது வாரிய தலைவர் பதவிகளுக்காக 30 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களை காங்கிரஸ் மேலிடத்திடம் முதல்-மந்திரி சித்தராமையா சிபாரிசு செய்தார். வாரிய தலைவர் பதவியை யாருக்கெல்லாம் வழங்க வேண்டும் என்ற பெயர் பட்டியலையும் காங்கிரஸ் மேலிடத்திடம் அவர் வழங்கி இருக்கிறார். வாரிய தலைவர், துணை தலைவர்களுக்கு வழங்கப்படும் பதவிகள் 30 மாதங்கள் ஆகும். அடுத்த 30 மாதம் மற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட உள்ளது. முதல்-மந்திரி சித்தராமையா அளித்துள்ள 30 எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு குறித்து டி.கே.சிவக்குமாருடன் ஆலோசித்து விட்டு இறுதி முடிவு எடுப்பதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்