அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகிற 18-ந் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-07-02 14:52 GMT

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகிற 18-ந் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எழுச்சியான வரவேற்பு

வருகிற 18-ந் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தரும் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் எழுச்சியான வரவேற்பும், ஆயிரக்கணக்கில் கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக் கூட்டத்தில் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

பொதுக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழகங்களின் சார்பில் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.

முதல்- அமைச்சருக்கு பாராட்டு

கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை கிண்டியில் கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனை மற்றும் திருவாரூரில் அமைக்கப்பட்டு கலைஞர் கோட்டம் உருவாக காரணமாக இருந்த தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியும், சிறப்புற அமைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவையும் மாவட்ட தி.மு.க. பாராட்டி மகிழ்கிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கட்சி தலைவரும், முதல் - அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதனை பயன்படுத்தி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக  நிர்வாகிகளும் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களும் விரைந்து செயல்பட்டு நமது கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களை அதிகம் சேர்த்திட வேண்டும்.

உடன் பிறப்புகளாய் இணைவோம்

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உடன் பிறப்புகளாய் இணைவோம் என்ற கட்சி தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணையையேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அனைவரையும், இந்த மாவட்ட கழகம் பாராட்டி மகிழ்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், பொன்.முத்து, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்