பஞ்சாப் முகாமில் சுட்டு கொல்லப்பட்டதேனி ராணுவ வீரர் உடல்இன்று கொண்டு வரப்படுகிறது:ஒரே மகனை இழந்து விட்டதாக பெற்றோர் கதறல்

பஞ்சாப் முகாமில் சுட்டு கொல்லப்பட்ட தேனி ராணுவ வீரர் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரே மகனை இழந்துவிட்டதாக பெற்றோர் கதறினர்.

Update: 2023-04-13 18:45 GMT

தேனி ராணுவ வீரர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் உள்ளது. இந்த ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், முகாமில் இருந்த 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர். இறந்தவர்களில் யோகேஷ்குமார் (வயது 24) என்பவர் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணான்டிபட்டியை சேர்ந்தவர்.

இவரது தந்தை ஜெயராஜ். விவசாயி. தாய் ரத்தினம். யோகேஷ்குமாருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். யோகேஷ்குமார் கல்லூரி படிப்பை முடித்ததில் இருந்தே, இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், நண்பர்களுடன் சேர்ந்து உள்ளூரில் பயிற்சி எடுத்து வந்தார். மேலும் தினந்தோறும் காலையில் அவரது தந்தை ஜெயராஜூடன் சேர்ந்து தோட்ட வேலைகளையும் செய்தார்.

ராணுவ முகாம்

இவரது விடா முயற்சியால் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவ பயிற்சிகளை முடித்துவிட்டு, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். யோகேஷ்குமார் தினந்தோறும் குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது குடும்பத்தினருக்கு பேரதிா்ச்சி காத்திருந்தது. அப்போது யோகேஷ்குமார் குடும்பத்தினருக்கு ராணுவ முகாமில் இருந்து செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் யோகேஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பெற்றோர் கதறல்

இந்த செய்தி அவரது பெற்றோருக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஒரே ஒரு மகனையும் இழந்து விட்டேனே என்று தலையில் அடித்து, அடித்து கதறி அழுதனர். இந்த செய்தி உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கும் தெரிய வந்தது. இதனால் மூணான்டிபட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்நிலையில் ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுமார் 8.00 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடையும்.

இன்று உடல் அடக்கம்

பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், குடும்பத்தினர் ஆகியோர் மூலம் ராணுவ வாகனத்தில் யோகேஷ் குமார் உடல் மூணாண்டிபட்டிக்கு கொண்டு வரப்பட உள்ளது. அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். இதையடுத்து முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்