கடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கு:இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசாருக்கு 3 ஆண்டு ஜெயில்
கடைக்காரரை மிரட்டி தாக்கிய வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீஸ்காரர்களுக்கு 3 ஆண்டு ெஜயில் விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தாக்கியதாக வழக்கு
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஏ.ஜி.கிருஷ்ணகுமார். இவர் மதுரை 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மேலமாசி வீதியில் ரியல் எஸ்டேட் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு மதுரை எஸ்.எஸ்.காலனி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட சில போலீசார் என் கடைக்குள் அனுமதியின்றி நுழைந்தனர். அத்துமீறி கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து சென்றனர். பின்னர் என்னை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் என்னிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார். மேலும் அந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்கும்படியும் வற்புறுத்தி, கடுமையாக தாக்கினர். இதில் என் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதுதொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட கோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளேன்.
3 ஆண்டு ஜெயில்
எனவே என் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக தாக்கிய எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மற்றொரு சரவணன், சடாச்சரம், போலீசார் ஜெகதீசன், ராமலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் அருணாச்சலம் உள்பட 7 பேரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். இதில் அருணாச்சலம் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.