அச்சங்குன்றம் கிராமத்தில் கடையடைப்பு போராட்டம்
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து வேறு ஒரு இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அங்கு தற்போது இயங்கி வருகிறது. பழைய பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு சர்ச் கட்ட ஒரு தரப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கல்வியாண்டில் பள்ளியில் படித்த 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த பள்ளியில் எங்கள் குழந்தைகளின் கல்வியை தொடர மாட்டோம் எனக்கூறி மாற்றுச் சான்றிதழ்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரகேரளம்புதூர் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அச்சங்குன்றத்திற்கு புதிய அரசு பள்ளி அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அச்சங்குன்றம் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் நலன் கருதி நேற்று திடீர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.