'தமிழக வெற்றி கழகம், தமிழகத்தில் வெற்றி பெறும்' - மகனுக்கு வாழ்த்து கூறிய ஷோபா சந்திரசேகர்

விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.;

Update:2024-02-02 20:51 IST
தமிழக வெற்றி கழகம், தமிழகத்தில் வெற்றி பெறும் - மகனுக்கு வாழ்த்து கூறிய ஷோபா சந்திரசேகர்

சென்னை,

அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியிருக்கிறார். 'தமிழக வெற்றி கழகம்' எனப் பெயரிடப்பட்டு உள்ள அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வர வேண்டும் என்று நினைப்பவர் விஜய். எனக்கு அரசியல் தெரியாது என சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் அரசியல் பொறுப்பு உள்ளது.

மதம், சாதி என்பதில் எல்லாம் விஜய்க்கு எப்போதும் உடன்பாடு இல்லை. தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்ற மாதிரி தமிழகத்தில் வெற்றி பெறும். வாகை சூடு விஜய்' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்