தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.;
சென்னை,
தமிழகத்தில் 7.5.2021 அன்று தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அன்றைய தினமே தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலாளராக இருந்த வெ.இறையன்பு தனது 60 வயதை நிறைவு செய்ததைத் தொடர்ந்து நேற்று பணி ஓய்வு பெற்றார்.
பதவி ஏற்றார்
புதிய தலைமைச் செயலாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் 49-வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்காக நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்திற்கு புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்றார். அவரை ஓய்வு பெறும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார். பின்னர் அவரிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.
கோப்பில் கையெழுத்து
பின்னர் இறையன்பு வழங்கிய பேனாவை பெற்றுக்கொண்ட சிவ்தாஸ் மீனா, புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து சிவ்தாஸ் மீனாவிற்கு மலர் கொத்துகளை கொடுத்து இறையன்பு வாழ்த்தினார். ஓய்வு பெற்றதற்கான கோப்புகளை இறையன்பு பெற்றுக்கொண்டார்.
பின்னர் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு இறையன்பு கிளம்பினார். அதைத் தொடர்ந்து சிவ்தாஸ் மீனாவும் இறையன்புவுடன் சென்றார்.
இறையன்பு செல்லும் கார் வரை சிவ்தாஸ் மீனா வந்து அவரை வழி அனுப்பி வைத்தார்.
வாழ்த்து
முன்னதாக இறையன்புக்கும், புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவிற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தலைமைச் செயலாளராக பதவி வகிப்பார்.