கரை ஒதுங்கி கிடக்கும் சங்குகள், பவளப்பாறை கற்கள்
வாலிநோக்கம் கடற்கரைப்பகுதியில் பலவகை சங்குகள், பவளப்பாறை கற்கள் கரை ஒதுங்கி கிடக்கிறது.;
சாயல்குடி,
வாலிநோக்கம் கடற்கரைப்பகுதியில் பலவகை சங்குகள், பவளப்பாறை கற்கள் கரை ஒதுங்கி கிடக்கிறது.
அரிய கடல்வாழ் உயிரினங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மொத்தம் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, நட்சத்திர மீன்கள், கடல் விசிறி, கடல் பன்றி, கடல் குதிரை உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதைத் தவிர பல அரிய வகை சங்குகள், சிப்பிகள் உள்ளிட்ட பொருட்களும் தீவை சுற்றி உள்ள கடல் பகுதியில் அதிக அளவு உள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக கடல் நீரோட்டம் மற்றும் சீற்றம் அதிகமாக உள்ளன.
சங்குகள், சிப்பிகள் கரை ஒதுங்கின
இதனால் கடலின் அடியில் இருந்து ஏராளமான பல அரிய வகை சங்கு மற்றும் சிப்பிகள் கடலின் மேல் பரப்புக்கு வந்து கரையில் ஒதுங்கி கிடக்கின்றன. ஏர்வாடி முதல் வாலிநோக்கம் வரையிலான கடற்கரைப்பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் சங்கு, சிப்பி உள்ளிட்ட பொருட்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
சங்கு ,சிப்பி வகைகளோடு பவளப்பாறை கற்களும் உடைந்து சேதமடைந்த நிலையில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இது போன்று கடல் நீரோட்டத்தின் மாறுபாட்டால் பவளப்பாறை கற்களும் உடைந்து சேதமடைந்து கரை ஒதுங்குவதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.