ஆக்கிரமிப்பு இடத்தில் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி கொட்டகை அமைப்பு

பெண்ணாடம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி கொட்டகை அமைத்தவர்களை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-05-31 19:20 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைக்கோட்டம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 18 பேருக்கு அதே பகுதியில் தலா 2½ சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து 18 பேருக்கும் ஒதுக்கி கொடுக்கவில்லை. இதனால் அந்த இடத்தை சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துநெல், கரும்பு பயிர்களை சாகுபடி செய்தனர்.

எனவே கடந்த 2 மாதத்துக்கு மன்பு பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என ஆதிதிராவிடர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அந்த இடத்தை அளவீடு செய்து கல் நட்டனர்.

சாலை மறியல்

இந்த கல்லை நேற்று சில விவசாயிகள் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நெல், கரும்பு பயிர்களை அறுத்து சேதப்படுத்தியதோடு, அந்த இடத்தில் கொட்டகை அமைத்தனர்.

இதையறிந்த கிராம மக்கள், பயிர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாளிகைக்கோட்டம் பஸ் நிறுத்தத்தில் நெல், கரும்பு பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து சென்று இருபிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், 10 நாட்களில் இடத்தை அளந்து 18 பேருக்கும் வழங்கப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்