வருமானம் இழந்து தவிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள்

வருமானம் இழந்து ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தவிக்கிறாா்கள்.

Update: 2022-10-25 18:45 GMT

நான் ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் இது சினிமா பாடலாக இருந்தாலும், அது தான் நிஜம். ஏனெனில் கடலூரில் சாலை மட்டுமின்றி, மாநகரில் உள்ள எந்த தெருக்களில் சென்றாலும் ஆட்டோக்கள் வலம் வராத தெருக்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஆட்டோக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் முக்கிய பங்காற்றுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கடலூர் மாநகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 50 ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. மாநகருக்குள் தேவனாம்பட்டினத்தை தவிர பிற பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது.

ஷேர் ஆட்டோ

ஷேர் ஆட்டோக்களுக்கு பஸ்களை போன்று இங்கு தான் நிற்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. இதனால் பொதுமக்கள் எந்த இடத்தில் நிற்க சொல்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது.

இது பொதுமக்களுக்கு சவுகரியமாக அமைந்துள்ளதால் பிற வாகனங்களை காட்டிலும் ஷேர் ஆட்டோ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தான் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தும் பிசியாகவே ஓடி வந்தன.

கட்டணம்

மேலும் பல்வேறு சாதாரண ஆட்டோக்களிலும் ஷேர் ஆட்டோ போன்றே பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஷேர் ஆட்டோக்களில் குறைந்த பட்சம் 10 ரூபாய் கட்டணமும், அதிகபட்சமாக 15 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோ போன்று இயக்கப்படும் சாதாரண ஆட்டோக்களில் ஏறினாலே கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் போல் இயங்கும் மற்றொரு வகையான ஆட்டோக்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணித்தாலும், 5 கிலோ மீட்டர் பயணித்தாலும் ஒரே கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சாதாரண கட்டண பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தால், ஷேர் ஆட்டோ ஓட்டும் தொழில் நலிவடைந்து வருவதாக டிரைவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். பலர் ஆட்டோக்களுடன் பல மணி நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் யாரும் ஏறாததால், ஒரு நாளைக்கு ஒரு சவாரி கூட செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

இலவச பயணம்

இதுகுறித்து ஷேர் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஷேர் ஆட்டோ டிரைவர் சுந்தர்:- பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் என்ற திட்டம் வருவதற்கு முன்பு கடலூரில் ஏராளமானோர் ஷேர் ஆட்டோக்களில் தான் பயணித்து வந்தனர். காரணம், பஸ் கட்டணம் போன்றே ஷேர் ஆட்டோக்களுக்கும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது பெண்கள் அனைவரும் இலவச பயணம் என்பதால், டவுன் பஸ்களில் செல்லவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

ஷேர் ஆட்டோ டிரைவர் பாலா:- பஸ் கட்டணங்களுக்கு இணையாகவே ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் விரும்பும் இடங்களில் நாங்கள் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விடுகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரில் ஆட்டோ ஓட்டுவது என்பது சவாலான தொழிலாகும். குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு இன்னல்களுக்கு இடையே ஆட்டோ ஓட்டி வருகிறோம். ஏற்கனவே எரிபொருள் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு அறிவிக்க வேண்டும்.

அதிக நேரம் பயணம்

பயணி சுமதி:- நான் வெளியூர் செல்லும் போது வீட்டில் இருந்து கடலூர் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டுமானால் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணித்து வந்தேன். தற்போது டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்பதால், அரசு டவுன் பஸ்சில் இலவசமாக செல்கிறேன். எனினும் அதிக நேரம் ஷேர் ஆட்டோவில் தான் பயணிக்கிறேன். அதில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மஞ்சக்குப்பத்திற்கு ஆட்டோக்களில் ரூ.15 முதல் ரூ.20 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மஞ்சக்குப்பம் பகுதிக்கு நகர பஸ்கள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பஸ் வசதி இல்லை

ராதிகா:- திருப்பாதிரிப்புலியூரில் இருந்து முதுநகர் பச்சையாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் ஷேர் ஆட்டோவில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் செல்வதால், எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கட்டணமும் குறைந்தளவே வசூலிக்கப்படுவதால், ஷேர் ஆட்டோக்களில் தான் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறேன். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்குவதற்கு பதிலாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் என அனைவருக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்.

அரசு நடவடிக்கை

கடலூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நல சங்க சிறப்பு ஆலோசகர் வெண்புறா குமார்:-

கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தும் பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படுகிறது. அதாவது பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் அறுபடை மருத்துவ கல்லூரி வரை 30 ஆட்டோக்களும், முதுநகர் பகுதிக்கு 6 ஆட்டோக்களும், சிங்காரத்தோப்பிற்கும், சான்றோர் பாளையத்திற்கும் 20 ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகிறது.

இவை அனைத்தும் பஸ் டிக்கெட் அடிப்படையிலேயே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

ஷேர் ஆட்டோக்களில் அதிகபட்சமாக ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்கனவே ஷேர் ஆட்டோ தொழில் முடங்கிய நிலையில் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தமிழக அரசு பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசம் என்ற அறிவிப்பை அறிவித்தது. அதனால் மேலும் வருமானம் வீழ்ச்சியடைந்து உள்ளது. ஏனெனில் ஆண்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் செல்வதுதான் அதிகம். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சைக்கிளில் சென்று விடுகிறார்கள். அதனால் பெண்கள் மட்டுமே ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பயணித்து வந்தனர். தற்போது பெண்களும் இலவச பயணம் என்பதால் பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்