இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் உள்பட 4 பேர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-07 00:12 GMT

மதுரை,

மதுரை புதூரை சேர்ந்தவர் பயாஸ்கான்(வயது 20). இவர் மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி உள்ளார். அதன் பிறகு பயாஸ்கான் அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிறுமியை ஏமாற்றி வீட்டில் இருந்து நகையை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அவரும் 10 பவுன் நகையை எடுத்து வந்து அவரிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த நகை மாயம் ஆனதால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

சிறுமி தான் ஒருவரிடம் நகையை கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் புதூர் பகுதியில் இருந்த பயாஸ்கானை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுமியிடம் வாங்கிய 10 பவுன் நகையை எப்படி பணமாக மாற்றுவது? என்பது தொடர்பாக அவர் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணகுமாரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். அதைத்தொடர்ந்து நகையை சரவணக்குமாரின் தாய் முத்துலட்சுமி மூலம் புதூரில் உள்ள அடகு கடையில் அடமானம் வைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

அதன்படி அவர் 10 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி கொடுத்து உள்ளார். இதில் பயாஸ்கான் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கொண்டார். மேலும், சதீசுக்கு ரூ.20 ஆயிரம், சரவணக்குமாருக்கு ரூ.30 ஆயிரம், முத்துலட்சுமிக்கு ரூ.50 ஆயிரம் என பங்கு போட்டுக் கொடுத்துள்ளது தெரியவந்தது.

அதை தொடர்ந்து சிறுமியை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பயாஸ்கான் மற்றும் சதீஷ், சரவணக்குமார், முத்துலட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் நகை அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள 10 பவுன் நகை மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்