காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை - உரிமையாளர் கைது

பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காப்பக உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-07-04 09:01 GMT

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார்.

இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை தன்மை இருப்பது உறுதியானது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவுப்படி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தில் மேலும் அதிரடி விசாரணை நடத்தினர்.

இதில் காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேரை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பகத்தை போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வந்ததால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்