8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆராய்ச்சி மாணவர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தஞ்சாவூர் ஆராய்ச்சி மாணவர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.;
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (வயது 35). எம்.காம் பட்டதாரியான இவர், தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி.) படித்து வந்தார். இவர், 5 முதல் 18 வயது வரையிலான சிறுமி மற்றும் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததும் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மேற்படி குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. மேலும், 4 ஆண்டுகளாக ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும், மொத்தம் 8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்தது.
குற்றப்பத்திரிகை
இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் இந்த வீடியோக்களை காண்பித்து மேலும் சிறுமிகளை அழைத்து வர கட்டாயப்படுத்தியதும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிந்தது. இதைத்தொடர்ந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
விக்டர் ஜேம்ஸ் ராஜா மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சாவூரில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
மேற்கண்ட தகவல் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.