தனியார் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை

திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை நடப்பதாக பெங்களூரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.;

Update: 2022-05-28 15:56 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் பாலியல் கொடுமை நடப்பதாக பெங்களூரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

அன்னதானம்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தின் மீது பரபரப்பு குற்றம் சாட்டி இன்று பெங்களூரு பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கி வருகின்றேன்.

அந்த சமயத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தை சேர்ந்த சிலர் என்னிடம் பேசி ஆசிரமத்தில் வைத்து அன்னதானம் வழங்கும்படி கேட்டு கொண்டனர். இதையடுத்து பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் அந்த ஆசிரமத்தில் வைத்து அன்னதானம் வழங்கி வந்தேன்.

2016-ம் ஜூன் மாதம் ஏற்பட்ட பிரச்சினையில் இருந்து அங்கிருந்து அன்னதானம் வழங்குவதில்லை. இதையடுத்து பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும்போதெல்லாம் அந்த ஆசிரத்திற்கு தரிசனம் செய்ய சென்று வருகிறேன். அப்போதெல்லாம் எனக்கு அவர்கள் இடையூறு செய்து வந்தனர்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி ஆசிரமத்திற்கு தரிசனம் செய்ய சென்ற போது அங்கிருந்த ஒரு சன்னதி முன்பு ஆசிரமத்தை சேர்ந்த நபர் பாலியல் சைகை காண்பித்தார்.

பின்னர் அங்கிருந்த காவலாளி எனது கையை பிடித்து இழுத்தார். அப்போது அவரது கையை தட்டி விட்டு சென்று விட்டேன்.

மீண்டும் 16-ந் தேதி ஆசிரமம் செல்லும் போதும் திட்டினர். அந்த ஆசிரமத்தில் சிவபக்தைகளிடமும், ஆசிரமத்தில் பணிபுரியும் பெண்களிடமும் பாலியல் கொடுமைகள் செய்கின்றனர்.

ஒரு நேர்மையான பெண் போலீஸ் அதிகாரியை நியமித்து விசாரணைகள் செய்தால் பல பாலியல் கொடுமைகள் பற்றிய விவரம் தெரியவரும். மேலும் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு கஞ்சாவை விற்கின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருவண்ணாமலையை சேர்ந்த வக்கீல் மற்றும் சுப்ரீம் கோர்டு வக்கீலும் உடனிருந்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் கேட்டபோது, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்