மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
மாணவிக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்ட பீகார் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த தம்பதி கடந்த 2017-ம் ஆண்டு பீகார் சென்றது. அப்போது தங்கள் மகளை அவருடன் படிக்கும் பீகாரை சேர்ந்த சக மாணவியின் வீட்டில் விட்டு சென்றனர். அப்போது, அந்த வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகாரை சேர்ந்த ராகுல்குமார் தந்தி (வயது 28) என்பவர் மாணவி குளிக்கும் போது மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகைகளை பெற்றுள்ளார். மேலும், மாணவியை கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ராகுல்குமார் தந்தி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ராகுல்குமார் தந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.