ரூ.32 கோடியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படும்
ஒட்டன்சத்திரத்தில் ரூ.32 கோடியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.;
ஒட்டன்சத்திரம் அண்ணாநகரில் இ-சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இ-சேவை மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இருப்பிடம், வாரிசு, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட அரசின் அனைத்து சான்றிதழ்களையும் துரிதமாக பெறுவதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இ-சேவை மையத்தை தொடங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் ஒட்டன்சத்திரத்தில் இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்திலேயே பொதுமக்கள் குறைதீர் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த குறைகளை 94880 77777 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதேபோல் தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இ-சேவை மையம் விரைவில் தொடங்கப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போது தொடங்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டம் 14 மாதத்தில் முடிவடையும். ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலையை சுற்றி ரூ.15 கோடியில் கிரிவலப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் நகரில் ரூ.32 கோடியில் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்படவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஆர்.டி.ஓ. சரவணன், தாசில்தார் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், கீதாராணி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர்கள் முருகானந்தம், சிவக்குமார், சிவபாக்கியம், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.