கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-05-19 18:45 GMT

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

தடுக்க வேண்டும்

விவசாயிகள்:- உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்த வகையில் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

கலெக்டர்:- ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்.

விவசாயிகள்:- கொசஸ்தலை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

கலெக்டர்:- நடவடிக்கை எடுக்க நெமிலி பேரூராட்சி அலுவலருக்கு உத்தரவிடுகிறேன்.

விவசாயிகள் :- தென்மாம்பாக்கம் கிராமத்தில் பச்சை மரங்களை ஏலம் விட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினர். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு மரம் ஏலம் விடுவதை நிறுத்தம் செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

நஷ்ட ஈடு

விவசாயிகள்:- பிரதி மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும், ஆற்காடு அருகே மணல் குவாரி அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

கலெக்டர்:- அதற்கான முதல் கூட்டம் ஜூன் மாதம் 5-ந் தேதி நடைபெறும்.

விவசாயிகள்:- காட்டுப்பன்றி மோதி விவசாயி உயிரிழந்ததற்கு நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்.

மாவட்ட வன அலுவலர் :- உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நஷ்ட ஈடு வழங்கப்படும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

மேலும் கலெக்டர் கூறுகையில், வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது. அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்