சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீர்

ஊட்டியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் ஆறாக கழிவுநீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.;

Update: 2023-05-20 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் ஆறாக கழிவுநீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

சுற்றுலா தலங்கள்

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 540 பேர் வசித்து வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன.

இது தவிர சுற்றுலா தலங்களை பார்வையிட தினமும் வழக்கமான நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் சுமார் 20 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் 35 ஆயிரம் பேரும் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.

சாக்கடையில் அடைப்பு

தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுவதால் கோடை சீசன் உச்சத்தில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பின் காரணமாக ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஊட்டியில் ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மேட்டுப்பாளையம்-ஊட்டி பிரதான சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் ஆறு போல் கழிவுநீர் ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் உள்பட வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டனர். அவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலை ஏற்பட்டது.

சரி செய்யும் பணி

இது தவிர பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை பெய்தாலே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதால் நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்ட அமைப்பை மறு சீரமைக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகளும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே நகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்