மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட பல ரெயில்கள் தாமதம்; 5 மணி நேரம் காத்திருந்த காரைக்குடி பயணிகள்
மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட பல ரெயில்கள் தாமதத்தால் 5 மணி நேரம் காரைக்குடி பயணிகள் காத்திருந்தனர்.
ரெயில்கள் தாமதம்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரெயில் தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும். பராமரிப்பு பணி காரணமாக அந்த ரெயில் நேற்று திருச்சியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த ரெயிலில் பயணம் செய்ய 200-க்கும் மேற்பட்டோர் டிக்கெட்டுகள் வாங்கி இருந்தனர்.
ஆனால் இரவு 9.30 மணி வரை அந்த ரெயிலில் என்ஜின் பொருத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ரெயிலில் பயணம் செய்ய 4½ மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பயணிகள் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5½ மணி நேரம் தாமதம்
அப்போது, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் என்ஜின் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் ரெயில் புறப்பட்டு விடும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் வழக்கத்தை விட சுமார் 5½ மணி நேரம் தாமதமாக திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதேபோல் மங்களூரு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதையா எக்ஸ்பிரஸ், செம்மொழி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்கள் 1 மணி நேரத்துக்கும் மேலாக திருச்சிக்கு தாமதமாக வந்து சென்றன. முன்னதாக ரெயில்கள் தாமதமாக வந்ததால், பிளாட்பாரம் எண் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து நுழைவு வாயில் பகுதியில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் காத்திருந்து, அறிவிப்பு பலகைகளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.