தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 749 வழக்குகளுக்கு தீர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 749 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி நேற்று முன்தினம் நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதன்படி மயிலாடுதுறையில் மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 749 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான கவிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ் கண்ணன், நீதித்துறை நடுவர் என்-1 கலைவாணி ஆகியோர்களின் அமர்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் அந்தந்த கோர்ட்டுகளில் நீதிபதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வக்கீல்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.